
ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த
ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியா
சார்பில் 25 பேர் மட்டுமே இதுவரை தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர குழு
போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்திய ஆண், பெண் ஹாக்கிஅணிகள் தகுதி
பெற்றுள்ளன.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் மக்களவையில் நேற்று அளித்த எழுத்துபூர்வ பதிலில் இதை அறிவித்தார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில்
நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு
ஜூலை வரை இருப்பதால், மேலும் பல வீரர்கள் தகுதி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது
என்றார் அமைச்சர்.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் இந்திய
வீரர், வீராங்கனைகளை பங்கேற்க செய்வதற்காக அரசு பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. இதற்காக சிறப்பு பயிற்சி முகாம்கள், உள்நாட்டிலும்
வெளிநாட்டிலும் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட பயிற்சிகள், வெளிநாட்டு
பயிற்சியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தபடுகின்றன.
ஒலிம்பிக் மெடல் மேடையை நோக்கி (டார்கெட் ஒலிம்பிக்
போடியம்) என்ற சிறப்பு திட்டம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை
அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தடகளம், அம்பு
எய்தல், பாட்மிண்டன், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் ஆகிய
விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் 106 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு
சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சிறப்பு நிதி உதவி
வழங்கப்பட்டு, சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்
அமைச்சர்.
சானியா நெவால், மோரிகோம், அபிநவ் பிந்த்ரா, சுஷில்குமார் உள்ளிட்ட வீரர்கள் இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment