9-வது ஐபிஎல் சீசனில் புதிதாக களமிறங்கவுள்ள புணே, ராஜ்கோட் அணிகளுக்கு தலா 5 வீரர்கள் மும்பையில் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்படுகின்றனர்.
கடந்த 8 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி மற்றும் முன்னணி வீரர்கள் எந்த அணியில் இடம்பெறுகிறார்கள் என்பது செவ்வாய்க்கிழமை தெரிந்துவிடும்.
2013 ஐபிஎல் சீசனின்போது நடந்த ஸ்பாட் ஃபிக்ஸிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளன. அதனால் அடுத்த இரு சீசன்களில் அந்த அணிகளுக்குப் பதிலாக புணே மற்றும் ராஜ்கோட் நகரங்களை மையமாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் களமிறங்குகின்றன.
புணே அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்ஜீவ் கோயங்காவின் நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை இன்டெக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன. அடிப்படை விலையாக ரூ.40 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நியூ ரைஸிங் நிறுவனம் மைனஸ் 16 கோடிக்கும், இன்டெக்ஸ் நிறுவனம் மைனஸ் 10 கோடிக்கும் முறையே புணே மற்றும் ராஜ்கோட் அணிகளை வாங்கின.
இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய 50 வீரர்களில் இருந்து தலா 5 பேரை தேர்வு செய்துகொள்ளலாம்.
புணே அணியை மைனஸ் 16 கோடிக்கு வாங்கியதன் அடிப்படையில் முதல் வீரரைத் தேர்வு செய்யும் உரிமை நியூ ரைஸிங் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. எனவே புணே அணி இந்திய கேப்டன் தோனியை முதல் வீரராக தங்கள் அணிக்கு தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கோட் அணி தங்களது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரரான ஆல்ரவுண்டர் ஜடேஜாவை முதல் வீரராகத் தேர்வு செய்யும் என தெரிகிறது.
இதுதவிர அஸ்வின், சுரேஷ் ரெய்னா, அஜிங்க்ய ரஹானே, ஸ்டீவன் ஸ்மித், ஷேன் வாட்சன், மெக்கல்லம், டூபிளெஸ்ஸிஸ், டுவைன் பிராவோ ஆகியோரை இரு அணிகளும் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு அணிகளும் தங்கள் அணிக்கு தேர்வு செய்யும் முதல் வீரருக்கு ரூ.12.5 கோடியும், 2-வது வீரருக்கு ரூ.9.5 கோடியும், 3-வது வீரருக்கு ரூ.7.5 கோடியும், 4-வது வீரருக்கு ரூ.5.5 கோடியும், 5-வது வீரருக்கு ரூ.4 கோடியும் வழங்க வேண்டும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
இந்த 10 வீரர்கள் தவிர, எஞ்சிய 40 வீரர்கள் பிப்ரவரியில் நடைபெறும் ஏலத்தின் மூலம் பல்வேறு அணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment