செகந்திராபாத்,
விஜய் ஹசாரே
கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த சர்வீசஸ் அணிக்கு எதிரான லீக்
ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் தர கிரிக்கெட்
27 அணிகள் பங்கேற்றுள்ள முதல் தர கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே
கோப்பைக்கான தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில்
செகந்திராபாத்தில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக
அணி, சர்வீசஸ் அணியை சந்தித்தது. முதலில் ஆடிய சர்வீசஸ் அணி
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.
தமிழக அணி தரப்பில் முகமது 5 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும்
வீழ்த்தினார்கள்.
தமிழக அணிக்கு 3–வது வெற்றி
பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழக அணி
39.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 7 விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் 110 பந்துகளில் 7
பவுண்டரியுடன் 85 ரன்கள் எடுத்தார். பாபா அபராஜித் 91 பந்துகளில் 3
பவுண்டரியுடன் 66 ரன்னும், விஜய் சங்கர் 16 ரன்னும் எடுத்து ஆட்டம்
இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வி
கண்ட தமிழக அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும்.
‘ஏ’ பிரிவில்
ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி, அசாமை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4
விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. மன்தீப்சிங் 117 ரன்களுடன்
களத்தில் இருந்தார். இதைத்தொடர்ந்து 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் ஆடிய அசாம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள்
எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை
சுவைத்தது. அசாம் வீரர் புர்கயஸ்தாவின் (125 ரன்கள்) சதம் வீணானது. 4–வது
ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 3–வது வெற்றியை கண்டது. அசாம் அணி தொடர்ந்து
சந்தித்த 4–வது தோல்வி இதுவாகும்.
அரியானா தோல்வி
பெங்களூருவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் அரியானாவுக்கு
எதிராக 134 ரன்கள் இலக்குடன் ஆடிய ஜார்கண்ட் அணி 29.4 ஓவர்களில் ஒரு
விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார
வெற்றி பெற்றது. ஜார்கண்ட் அணிக்கு கிடைத்த 3–வது வெற்றி இது.
No comments:
Post a Comment