இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? என்பதை நிர்ணயிக்கும் அரை இறுதிப்போட்டியில் கோவா-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கோவா-டெல்லி மோதல்
2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கோவாவில் உள்ள படோர்டாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று அரை இறுதிப்போட்டியில் எப்.சி.கோவா-டெல்லி டைனமோஸ் அணிகள் சந்திக்கின்றன.
2 லீக் ஆட்டங்களிலும் டெல்லி அணியை வீழ்த்தியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடம் வகித்த கோவா அணி அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் கோவா அணிக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் ஆதரவு கைகொடுக்குமா?
இன்றைய ஆட்டத்தில் கோவா அணி 2 கோல் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தினால் தான் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும். டெல்லி அணியை பொறுத்தமட்டில் டிரா செய்தாலோ, அல்லது 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டாலும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். 1-2 என்ற கணக்கில் டெல்லி அணி தோல்வி கண்டால் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து இருக்கும். ஆனால் சொந்த ஊரில் அடிக்கும் கோலை விட வெளியூரில் அடிக்கும் கோலுக்கு மதிப்பு அதிகமாகும். அதன் அடிப்படையில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
கோவா அணியில் ரீனால்டோ, ராஜூ கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள் என்று தெரிகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் கோவா அணி லியோ மோராவையே (பிரேசில்) அதிகம் நம்பி இருக்கிறது. டெல்லி அணியில் முதலாவது அரை இறுதியில் வெற்றிக்கான கோலை அடித்த ராபின்சிங், மலுடா, சான்டோஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சொந்த ஊரில் இறுதிப்போட்டி நடைபெறுவதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற கோவா அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் அந்த அணிக்கு வலுசேர்க்கும்.
பயிற்சியாளர்கள் நம்பிக்கை
இன்றைய போட்டி குறித்து எப்.சி.கோவா அணியின் பயிற்சியாளர் ஜிகோ அளித்த பேட்டியில், ‘அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி எங்களுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தவில்லை. இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. எங்கள் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ராஜூ கெய்க்வாட் காயம் அடைந்ததை டெல்லி அணி சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்தது. எங்களுக்கு கிடைத்த சில வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். இன்றைய ஆட்டத்தில் விழிப்புடன் விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம்’ என்று தெரிவித்தார்.
டெல்லி அணியின் பயிற்சியாளர் ராபர்டோ கார்லோஸ் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி எப்பொழுதும் தாக்குதல் ஆட்டத்துக்கு தான் முன்னுரிமை அளிக்கும். அதே தாக்குதல் ஆட்டத்தை தான் இந்த போட்டியிலும் கடைபிடிப்போம். கோவாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறோம். வீரர்கள் அனைவரும் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர்’ என்றார்.
நேரடி ஒளிபரப்பு
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் டெலிவிஷன்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன
No comments:
Post a Comment