இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கோவா எப்.சி.-தில்லி டைனமோஸ் அணிகள் இடையிலான முதல் அரையிறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தில்லியை 2 கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தாலொழிய இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற இக்கட்டான சூழலில் களமிறங்குகிறது கோவா. ஆனால் தில்லி அணியோ முதல் சுற்றில் 1-0 என்ற கணக்கில் வென்றிருப்பதால், இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறது.
கோவா அணியைப் பொருத்தவரையில் முன்னணி ஸ்டிரைக்கரான ரெனால்டோ, முன்னணி பின்கள வீரரான ராஜு கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடமாட்டார்கள். அதேநேரத்தில் லூஸியானோ சாப்ரோஸா, ரஃபேல் கோயல்ஹோ ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
ஸ்டிரைக்கர் சபீத், மிட்பீல்டர்கள் ஜோப்ரே, லூக்கா, மெளரா ஆகியோரின் ஆட்டம் கோவாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும். முதல் சுற்றில் ஜோப்ரே கோல் வாய்ப்புகளை உருவாக்கியபோதிலும் மற்ற வீரர்கள் அதை கோட்டைவிட்டனர். இந்த சீசனில் சொந்த ஊரில் விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே கோவா அணி வென்றுள்ளது.
தில்லி அணியைப் பொருத்தவரையில் இந்த சீசனின் லீக் சுற்றில் வெளியூரில் விளையாடிய 7 ஆட்டங்களில் 4-ல் வென்றுள்ளது. அந்த அணியின் முன்களத்தில் ராபின் சிங், அடில் நபி ஆகியோரும், நடுகளத்தில் சான்டோஸ், மலூடா, சிகாவ் போன்றோரும் பலம் சேர்க்கின்றனர்.
இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவோம்: கோவா அணியின் பயிற்சியாளர் ஸிகோ கூறுகையில், "முதல் சுற்றில் கோலடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. எங்கள் அணியின் முன்னணி பின்கள வீரரான ராஜூ கெய்க்வாட் காயமடைந்த பிறகுதான் தில்லி அணி கோலடித்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. அந்த ஆட்டத்தில் தில்லி அணி எங்களைவிட சிறப்பாக ஆடியது என கூறமுடியாது. அப்படி கூறினால் அது உண்மையாக இருக்காது. இரு அணிகளுக்கும் கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் தில்லி அணி கோலடித்தது. எங்களால் கோலடிக்க முடியவில்லை. ஆனால் 2-வது சுற்று ஆட்டத்துக்கு எங்கள் அணி சிறப்பாக தயாராகியிருக்கிறது. எனவே செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் எங்கள் அணி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்' என்றார்.
வெற்றி எங்களுக்கே: தில்லி அணியின் பயிற்சியாளர் ராபர்ட்டோ கார்லோஸ் கூறுகையில், "கடந்த முறை நாங்கள் இங்கு விளையாட வந்தபோது, கோவா அணியுடனான முந்தைய ஆட்டத்தில் தோற்றிருந்தோம். ஆனால் இந்த முறை அவர்களை வீழ்த்திய உற்சாகத்தில் வந்திருக்கிறோம். முதல் சுற்றில் ஆடியதைப் போன்றே 2-வது சுற்றிலும் ஆட விரும்புகிறோம். இந்த ஆட்டதிலும் எங்கள் அணி தாக்குதல் ஆட்டத்தையே கையாளும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.
எங்கள் வீரர்கள் அனைவரும் உத்வேகத்தோடு காணப்படுகிறார்கள். அவர்கள் கோவாவை எதிர்கொள்ளவும், நல்லதொரு ஆட்டத்தை ஆடவும் தயாராக இருக்கிறார்கள். எங்கள் வீரர்கள் முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் கடந்த ஆட்டத்தில் கோவாவை வீழ்த்த முடிந்தது. எனவே 2-வது சுற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'
என்றார்.
நேருக்கு நேர்
ஐஎஸ்எல்லில் இதுவரை இவ்விரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 4-ல் கோவா வென்றுள்ளது. எனினும் தில்லியில் கடைசியாக மோதிய ஆட்டத்தில் தில்லி அணி 1}0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி?
இந்த ஆட்டம் டிராவில் முடியும்பட்சத்தில் தில்லி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தில்லி அணியை தோற்கடிக்கும்பட்சத்தில், இறுதிச்சுற்று வாய்ப்பை தீர்மானிப்பதற்காக கூடுதல் நேரம் வழங்கப்படும். அதில் இரு அணிகளும் கோலடிக்காதபட்சத்தில், பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்படும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
கோவா அணி 2 கோல் வித்தியாசத்தில் அதாவது 2-0 என்ற கோல் கணக்கிலோ அல்லது 3-1 என்ற கணக்கிலோ வெற்றி பெறும்பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். மாறாக 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, இரு கோல்களுடன் சமநிலையில் இருக்கும். அப்போது கோவாவில் கோல் அடித்ததன் அடிப்படையில் தில்லி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
கோவாவுக்கே வெற்றி
இந்தப் போட்டியில் கோவா அணி 2-1 என்ற கணக்கிலோ அல்லது 2-0 என்ற கணக்கிலோ வெற்றி பெறும் என பல்வேறு கால்பந்து இணையதளங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன.
போட்டி நேரம்: இரவு 7 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்
No comments:
Post a Comment