ராய்ப்பூர்,
உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டியின் 3–வது இடத்திற்கான
ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் நெதர்லாந்தை தோற்கடித்து
வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.
உலக ஆக்கி
8 முன்னணி அணிகள் பங்கேற்ற உலக ஆக்கி லீக் இறுதி சுற்று சத்தீஷ்கார்
மாநிலம் ராய்ப்பூரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்று
இரவு அரங்கேறிய வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3–வது
இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவும், பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன்
நெதர்லாந்தும் மோதின. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து 2–0
என்ற கோல்கணக்கில் முன்னிலை கண்டது.
அதன் பிறகு இந்திய வீரர்களின் கை
ஓங்கியது. ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீரர்கள் வரிசையாக கோல் மழை பொழிந்தனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 5–3 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றியை
நெருங்கியது. இதில் ரமன்தீப்சிங், ருபிந்தர்பால் சிங் தலா 2 கோலும்,
ஆகாஷ்தீப் சிங் ஒரு கோலும் போட்டனர். ஆனால் 2 நிமிடங்கள் இருக்கும் போது
நிலைமை தலைகீழானது. நெதர்லாந்தின் வான்டெர் வீர்டென் அடுத்தடுத்து இரண்டு
கோல்கள் (58–வது மற்றும் 60–வது நிமிடம்) அடிக்க, 5–5 என்ற கோல் கணக்கில்
சமநிலையை எட்டியது.
இந்தியா வெற்றி
இதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை
கடைபிடிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள்
வழங்கப்பட்டன. நெதர்லாந்து தனது 5 வாய்ப்பில் 2–ஐ கோலாக மாற்றியது. இந்தியா
முதல் 4 வாய்ப்பில் 2 கோல்கள் அடித்தது. இதனால் கடைசி வாய்ப்பை இந்தியா
கோலாக்குமா? என்று களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 5–வது வாய்ப்பை
இந்திய வீரர் மன்பிரீத் கோல் அடிக்க முயற்சித்த போது, நெதர்லாந்து கோல்
கீப்பர் பிர்மின் பிளாக், அவரது கால்களை பிடித்து இடையூறு செய்தார். இதனால்
அவரால் பந்தை இலக்கை நோக்கி அடிக்க முடியாமல் போனது. கோல் கீப்பரின்
விதிமீறலுக்காக இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை
ருபிந்தர் பால் சிங் வலைக்குள் அடித்து, ரசிகர்களை ஆர்ப்பரிப்பில் மிதக்க
வைத்தார்.
பெனால்டி ஷூட்–அவுட் முடிவில் இந்திய அணி 3–2 என்ற
கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை ருசித்தது. இதன் மூலம்
லீக்கில் அந்த அணியிடம் 1–3 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்விக்கும்
இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.
33 ஆண்டுக்கு பிறகு...
இது போன்ற மிகப்பெரிய சர்வதேச போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வது
33 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக இந்திய அணி 1982–ம்
ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம்
வென்றிருந்தது.
No comments:
Post a Comment